இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று முன்தினம் பதவியேற்றது. 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று முதல் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “நீங்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக போராடுவதால், நான் இதை ஒரு போர் மந்திரி சபையாக கருதுகிறேன். நாடு எனும் படகு கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது. அந்த படகை நாம் கரைக்கு கொண்டுசெல்ல வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற சவால்களுடன் நாம் போராட வேண்டியுள்ளது. ஏனெனில் முந்தைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மோசமாக தோல்வியடைந்தது” என கூறினார். மேலும் அவர் தற்போதைக்கு அரசியல் அல்ல, வளர்ச்சியே நமது முன்னரிமை என மந்திரி சபையை வலியுறுத்தினார்.
இதையும் படிக்கலாம்…
பாகிஸ்தானில் மக்களின் ஒருநாள் சராசரி வருமானம் ரூ.600க்கும் குறைவு: அதிர்ச்சி தகவல்