ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? – வலுக்கும் குற்றச்சாட்டு; மறுக்கும் காவல்துறை… நடந்தது என்ன?

மயிலாடுதுறை தருமபுரம் ஆதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழக ஆளுநர் ரவியின் கார்மீது கற்களை வீசியும், கருப்புக்கொடிகளை எறிந்தும் தாக்க முற்பட்டதாகவும், தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனவும் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டியிருக்கின்றன. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். என்ன நடந்தது மயிலாடுதுறையில்?

ஆளுநருக்கு விடுக்கப்பட்ட அழைப்பும்.. எதிர்ப்பும்:

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, மயிலாடுதுறை அருகில் இருக்கும் தருமபுரம் ஆதீனம். இங்கிருந்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் புஷ்கர விழாவில் கலந்துகொள்வதற்காக, `ஞானரத யாத்திரை’ நடத்த ஆதீனம் சார்பில் திட்டமிடப்பட்டது. இந்த ரத யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆதினம் சார்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், `நீட் விவகாரம், ஏழு தமிழர் விடுதலை என தமிழக அரசின் 18-க்கும் மேற்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டுவரும் ஆளுநரை, 420 ஆண்டுகால தமிழ்மரபு கொண்டு விளங்கும் தருமபுரம் ஆதினம் ஒருபோதும் அழைக்கக்கூடாது; கொடுத்த அழைப்பை திரும்பப் பெற வேண்டும்! இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்’ என பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள் மற்றும் வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக்கட்சிகள் கோரிக்கை வைத்து, தருமபுரம் ஆதீன மேலாளரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். ஆனால், தருமபுரம் ஆதீனம் ஆளுநரை அழைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த 13-க்கும் மேற்பட்ட அமைப்பினர், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்தனர்.

ஆளுநர் ரவி – தருமபுர ஆதினம்

கருப்புக்கொடி போராட்டமும், கனிவான வரவேற்பும்:

இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற ஏப்ரல் 19-ம் தேதி காலையில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, தருமபுரம் ஆதீனம் நோக்கி ஆளுநர் காரில் புறப்பட்டார். அதேசமயம் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மண்ணம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி அருகே போராட்டக்காரர்கள் கருப்புக்கொடிகளுடன் தயாராக இருந்தனர். ஆளுநர் பயணத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறையினர் போராட்டக்காரர்கள் சாலைநோக்கி வந்துவிடாமல் தடுக்க, காவல் தடுப்புகளை அமைத்தும், காவல்துறை வாகனங்களை குறுக்கே நிறுத்தியும் இருந்தனர். அந்த நிலையில், சரியாக காலை 9:50 மணியளவில் போராட்டக்காரர்கள் குழுமியிருக்கும் மண்ணம்பந்தல் சாலையை ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்துசென்றுகொண்டிருந்தன. அப்போது ஆளுநரின் வருகைக்கு எதிராக, கோஷங்களை எழுப்பியும், கருப்புக்கொடி காட்டியும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். அதைக் காவல்துறையினர் தடுக்கமுற்படவும், கருப்புக்கொடிகளை சாலையை நோக்கி எறிந்தனர். அதன்பின்னர் ஆளுநரின் வாகனங்கள் சென்ற பின்னர், போராட்டக்காரர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இறுதியாக, ஆதினத்திற்குச் சென்ற ஆளுநருக்கு, பா.ஜ.க மற்றும் ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, விழா சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஞானரத யாத்திரையைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக டி.ஜி.பிக்கு பறந்த ஆளுநர் மெய்க்காப்பாளரின் அறிக்கை:

இந்த சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ரவியின் மெய்காப்பாளரான விஷ்வேஷ் சாஸ்திரி (Vishwesh B. Shastri, IPS), தமிழக டி.ஜி.பி-க்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், “தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநரின் கான்வாய் மண்ணம்பந்தல் பகுதியைக் கடந்தபோது, ஆளுநரின் காரை வழிமறிப்பதற்காக போராட்டக்காரர்கள் காவல்துறையினரை தள்ள முயற்சித்தனர். மேலும், தங்கள் கைகளில் வைத்திருந்த கொடிகளை கான்வாய் நோக்கித் தூக்கி வீசினர். நல்வாய்ப்பாக, ஆளுநரின் கான்வாய் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அந்தப் பகுதியை பாதுகாப்பாக கடந்து சென்றது. அதேசமயம், அவர்களின் ஆக்ரோஷமான செயல்பாடுகள், ஆளுநரை தமக்குரியப் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கும் முயற்சியாக இருந்தது. இது இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். எனவே இந்த விவகாரம் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் கண்டனம்:

ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும்? தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என தனது அறிக்கையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல, தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்களைக் கட்டிக் கொண்டு, தனது கட்சி சித்தாந்தத்தோடு மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார். ஆளுநர் மீது தி.மு.க. தொண்டர்கள் எதேச்சையாக தாக்குதல் நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளது. ஆளுநர் உயிருக்கு ஆபத்து என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முதலமைச்சர் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். அநாகரீகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பாஜக விரும்பவில்லை. ஆளுநரின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது. இந்த சம்பவத்தில் உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். இது தொடர்பாக, டி.ஜி.பி., உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும்” என காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதினார்.

தமிழக டிஜிபி ஆனார் சைலேந்திர பாபு

தமிழக டி.ஜி.பி தரப்பின் விளக்கம்:

இந்தக் குற்றசாட்டுகளை மறுத்து தமிழக காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. அதில், “ஆளுநரின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டமுயன்றவர்களுக்கு முன்பாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை; அந்த ஆதங்கத்தில் சிலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆளுநரின் கான்வாய் சென்ற சாலையில் கொடிகளை வீசினர். ஆனால், அந்தக் கொடிகள் அனைத்தும் ஆளுநர் கான்வாய் முழுவதும் சென்றபின்னர் காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீதே விழுந்தன. எனவே, ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை! காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளாக வைத்திருந்தனர். மேலும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, வாகனத்தில் ஏற்றினர். அவர்கள்மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

தமிழக முதல்வரின் விளக்கம்:

இந்த நிலையில், ஆளுநரின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் கான்வாய் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. அதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கூடுதல் டி.ஜி.பி கூறியுள்ளார். மேலும், ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள்மீது கற்களாலோ, கொடிகளாலோ வேறு எந்தப்பொருள்களாலோ பாதிக்கப்படாமல் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியையும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, டி.ஜி.பி-க்கு கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

இந்த அரசு, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்திருக்கிறது. ஆளுநர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்கு பொறுப்பிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.