ஆன்மிக சுற்றுப்பயணம்:
டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆன்மிக திருத்தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த சுற்றுப்பயணத்தின் போது தருமை ஆதீனத்தில் அவர் கலந்துகொள்வதற்கு ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயணத்தின் போது தான் அவரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை காவல்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநரின் மனநிலை குறித்து அவருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
“தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றபின்னர், ஒவ்வொரு ஆன்மிக தளத்திற்கும் விசிட் செய்துவருகிறார். தனது பிறந்தநாளையொட்டி, அவர் சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்துக்குச் சென்றிருந்தபோது, மண்டபம் தொடர்பான வழக்கு தகவல்களை அவரிடம் நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டனர். `நான் கவனித்துக்கொள்கிறேன்’ என அவர்களிடம் உறுதியளித்துவிட்டு வந்தார் ரவி. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே நீதிமன்ற உத்தரவை வைத்து அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இதை ரவி எதிர்பார்க்கவில்லை. தன்னைமட்டுமின்றி, தான் செல்லுமிடமெல்லாம் திமுக அரசு குறிவைத்து பிரச்னையைக் கிளம்புவதாக அவர் அதிருப்தி அடைத்தார். இந்த சமயத்தில் தான் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்தது. இதற்காக டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் கிளம்பினார் ஆளுநர் ரவி.
சிதம்பரத்தில் சபதம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவர் தரிசனத்தை முடித்துவிட்டுக் கிளம்பும்போது, கோவில் தீட்சதரர்கள் சிலர் `அடுத்ததாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு இந்து அறநிலையத்துறை தீவிரம் காட்டுகிறது. ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் கோவில் பாரம்பரியத்தை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். அதனை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ரவி தன்னால் ஆன முயற்சிகளைச் செய்வதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார். அப்போதும் விடாத சில தீட்சிதர்கள் கோவிலின் பாரம்பரிய வரலாற்றை ரவிக்கு எடுத்துரைத்து ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த பிரச்னைகளைப் பட்டியலிட்டனர். அவர்களிடம், `கோவில் பாரம்பரியம் கெடுவதற்கு ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று சபதமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் ரவி.
இதனைத் தொடர்ந்து, தருமை ஆதீனத்தில் நிறுவப்பட்டுள்ள பழங்கால கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ரவி, குருமகா சன்னிதானத்தின் ஞானரத யாத்திரையைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதேபோல, திருவாடுதுறை ஆதீனத்திற்கும் விசிட் செய்த ஆளுநர் ரவி 24-வது குருமகா ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது, டெல்டா மாவட்டங்களில் உள்ள இந்து சமய மடங்களுக்குப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சொத்துக்களாக உள்ளது குறித்தும், அதன் குத்தகை தொடர்பான விவகாரங்களை ஆளுநர் ரவியிடம் சிலர் முறையிட்டிருக்கிறார்கள். அனைத்தையும் அவர் உள்வாங்கிக்கொண்டார்.
டெல்லி பயணம்:
இந்த சுற்றுப்பயணத்தின் போது தான் சில அரசியல் அமைப்புகள் போராட்டம் என்கிற பெயரில் அவரின் கான்வாய் மீது கறுப்புக்கொடியை வீசியெறிந்திருக்கிறார்கள். இதில், ஆளுநர் கடும் அப்செட். சென்னைக்குத் திரும்பியவர், ஏப்ரல் 20-ம் தேதி காலையிலேயே டெல்லிக்குக் கிளம்பிவிட்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கும் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு அனுப்பிய 11 தீர்மானங்களில் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் ரவி அமைதி காக்கிறார். இது அரசியல் ரீதியாக திமுகவுக்கும், ராஜ்பவனுக்கும் மோதலாக வெடித்திருக்கிறது. இதுகுறித்தெல்லாம், டெல்லியின் ஆலோசனையைப் பெறத் திட்டமிட்டிருக்கும் ரவி தன் கான்வாய் மீதான தாக்குதல் குறித்தும் விவரிக்கவிருக்கிறார். ரவிக்குக் கூடுதலாக சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பும் அளிக்கப்படலாம்” என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கத் தான் அவர் டெல்லி சென்றதாக ஒருசாரார் கூறும் நிலையில், `டெல்லியில் ரவியின் வீட்டுக் கட்டடப்பணி நடைபெற்று வருகிறது. அதனைப் பார்வையிடவும், சமீபத்தில் திருமணம் முடிந்த தனது மகளைப் பார்த்து நலம் விசாரிக்கவும் தான், தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றிருக்கிறார் ரவி. இத்துடன் நாகாலாந்து பிரச்னை தொடர்பாகவும் மத்திய உள்துறையில் அவர் சில விளக்கங்களை அளிக்கவேண்டியுள்ளது. பணிகளை முடித்துவிட்டு மறுநாளே(21.04.2022) மீண்டும் சென்னை திரும்புகிறார்’ என்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள். தமிழகத்தில் அரசியல் சூடு அதிகரித்துவரும் நிலையில் ஆளுநரின் இந்த டெல்லி பயணம் பல யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த பயணம் திமுகவுக்குக் குடைச்சலைத் தருமா அல்லது சுமுகமாகக் கடந்துவிடுமா என்பதெல்லாம் ரவி தமிழகம் திரும்பிய பிறகு தெரிந்துவிடும்.