பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டுநாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்து சேர்ந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் இருந்து அவர் தங்கியுள்ள ஓட்டல் வரையிலும் இருபுறமும் மக்கள் கையசைத்து போரிஸ் ஜான்சனை வரவேற்றனர். ஆங்காங்கே கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட உள்ள போரிஸ் ஜான்சன், தொடர்ந்து இந்திய முன்னணி தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகம், புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இங்கிலாந்து பிரதமருக்கு பாரம்பரிய வரவேற்பு மரியாதை அளிக்கப்படுகிறது. மோடியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா – பிரிட்டன் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.