தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்
குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜ்மோகன் இயக்கத்தில், அதர்வாவின் கௌரவ தோற்றத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கே,ராஜன், தயாரிப்பாளர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளது. 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இறுதி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் தயார் செய்வது கடினமாக உள்ளது.
நடிகர்கள் டப்பிங் பேசுவதற்கு முன்பு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால் டப்பிங் பேச மறுக்கின்றனர். தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்குதான் கடன் வாங்குவது? எந்த சொத்தை விற்று தொகையை தயார் செய்வது என கேள்வி எழுப்பினார். அத்துடன் சமீபத்தில் வெளியான திரைப்படம் தோல்வியடைந்த நிலையிலும், அந்தப் படத்தின் நடிகர் (அஜித்) தன்னுடைய சம்பளத்தை 40 கோடி ரூபாய் உயர்த்தி விட்டார் என கூறினார். சினிமாவில் முதலீடு செய்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களும் நன்றாக இருக்கவேண்டும் அப்போதுதான் நல்ல சூழல் ஏற்படும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் சில நடிகர்களின் ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். அதை அந்த நடிகர்களே தூண்டி விடுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.
முன்பு ஒரு காலத்தில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய ரசிகர்களை தூண்டி விட்டு தன்னை மிரட்டியதாகவும், அந்த ரசிகர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்தப்பட்டனர் என தெரிவித்தார். ஆனால் கைதுசெய்யப்பட்ட மூன்று ரசிகர்களை கமல் கண்டுகொள்ளவில்லை. இதனால் நானே புகாரை வாபஸ் பெற்று, ஜாமினில் எடுத்தேன் என கே.ராஜன் கூறினார். இதனால் யார் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். சினிமா நன்றாக இருக்க தொடர்ந்து பாடுபடுவேன் எனவும் அட்ரஸ் பட விழாவில் கூறினார் கே.ராஜன்.
இதனைப் படிக்க:`அதிகமாக சம்பளம் கேட்கும் நடிகர்கள், கலைஞர்கள் எங்களுக்கு வேண்டாம்’- ஆர்.கே.செல்வமணி