கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் புதிய துணை ஜனாதிபதியாக வாய்ப்பு

திருவனந்தபுரம்:

இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந் தேதியுடன் முடிகிறது. இதுபோல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதியுடன் முடிகிறது.

எனவே இவ்விரு பதவிகளுக்கும் புதிய நபர்களை தேடும் பணி தொடங்கி விட்டது. நாட்டின் முதல் குடிமகன் பொறுப்புக்கு அடுத்து வரப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை போல துணை ஜனாதிபதி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வியும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு துணை ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஆரிப் முகமது கான் பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்து மத்திய மந்திரியாக பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி கேரள கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். அப் போது முதல் மாநில அரசுடன் பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

இதனால் மாநில அரசுக்கும், ஆரிப் முகமது கானுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வழக்கமாக ஜனாதிபதி பதவி வட மாநிலத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவி தென் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். எனவே ஆந்திராவை சேர்ந்த வெங்கையா நாயுடும் துணை ஜனாதிபதி ஆனார்.

இம்முறை ஜனாதிபதி பதவிக்கு தென் மாநிலங்களை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தென் மாநிலத்தவர் ஜனாதிபதி ஆனால், வடமாநிலத்தை சேர்ந்த ஆரிப் முகமது கான் துணை ஜனாதிபதியாக வாய்ப்பு உள்ளது.

கேரள கவர்னர் பதவியில் இருந்து ஆரிப் முகமது கான் மாற்றப்பட்டால் அவருக்கு பதிலாக தமிழக பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர் கேரள கவர்னராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதில் எச்.ராஜா உள்பட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.