அடுத்த குடியரசுத் தலைவர் யார்? எதிர்கட்சிகளின் வியூகம் என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள நிலையில் தற்போதே அத்தேர்தலில் யாரை பாரதிய ஜனதா களமிறக்கும் என பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் யோசித்து வருகின்றன. இது குறித்து எதிர்க்கட்சிகள் வரும் மே மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் பேச தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 2.9 சதவிகித வாக்குகள் உள்ளதால் அதன் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

பிஜு ஜனதா தளம் கட்சி தற்போது மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு பிரச்னைகள் அடிப்படையிலான ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் ஆதரவை பெற தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சியை தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 4 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடனும் பேச வாய்ப்புள்ளதாக டிஆர்எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

image
இதற்கிடையே பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி உடன் பேசியுள்ளார். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்திய மீரா குமார் பாரதிய ஜனதாவின் ராம்நாத் கோவிந்த்திடம் தோல்வியுற்றார். இம்முறை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 48.9% வாக்குகளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 21.9% வாக்குகளும் உள்ளன. மற்ற கட்சிகளுக்கு 29.2% வாக்குகள் உள்ளன. எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகள் பலவற்றின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை இறக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றிபெற்றால் அது 2024 மக்களவை தேர்தலுக்கு ஆளுங்கட்சிக்கு சவாலாக அமையக் கூடிய வலுவான எதிரணியை அமைப்பதற்கான முக்கிய நகர்வாக அமையும் என கருதப்படுகிறது.

இதையும் படிக்க: கேரளாவில் மே 1 முதல் உயர்கிறது பேருந்து கட்டணம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.