கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அதிபர் கோத்த பய ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேகாலை-ரம்புச்கனை பகுதியில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 13 பொதுமக்கள், 20 போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து ரம்புக்கனை பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் ரம்புக்கனை பகுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதற்கான அறிவிப்பை போலீசார் வெளியிட்டனர். துப்பாக்கி சூடுசம்பவம் தொடர்பாக சிறப்பு குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அமைச்சர் உத்தரவிட்டதாக எம்.பி. தெரிவித்துள்ளார். காலி மாவட்ட எம்.பி. மனுவு நாணயக்கார பாராளுமன்றத்தில் கூறியதாவது:-
பொதுமக்கள் மீதான துப்பாக்கி சூட்டுக்கு பிரதான அனுமதியை கண்டி மாவட்டத்தை சேர்ந்த புதிய போக்குவரத்து அமைச்சரே வழங்கி உள்ளார். எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட நபர் வீதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த நபர் போலீஸ் வாகனத்துக்கு அழைத்து சென்று அவரது தொலைபேசியை போலீசார் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.
அங்கு யாரும் தீவைக்க முயற்சிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் காணொலியில் தெளிவாக உள்ளது. ரெயில் பாதையை கடக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அருகில் வைத்து கண்டி அமைச்சர் ஒருவருடன் போலீசார் அதிகாரி கீர்த்தரத்ன தொலைபேசியில் உரையாடி உள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு ஏதாவது செய்யுமாறு கீர்த்தரத்னவிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
தன்னை கவனித்துக் கொண்டால் வேலையை சரியாக செய்துவிடுவேன் என கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது நிராயுதபாணிகளின் அமைதி போராட்டம். இந்த போராட்டம் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டதல்ல. கவிதை எழுதும் கிட்டார் வாசிக்கும் இளைஞர்களின் போராட்டம். அதை வன்முறையாக மாற்றுவது மிகவும் திட்டமிட்ட செயலாகும்.
காலி போராட்டத்தில் கொழும்பில் இருந்து கும்பல்களை அழைத்துச்செல்லும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கபடுகின்றது. அவர்களை மக்கள் மத்தியில் ஈடுபடுத்தி வன்முறையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.