நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்.. கர்நாடக அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

பாஜக
ஆளும் மாநிலங்களில்
புல்டோசர் அரசியல்
அறிமுகமாகியுள்ளது. கிரிமினல்களுக்கு எதிரான நடவடிக்கையில் புதிய அணுகுமுறையாக அவர்களது வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்க ஆரம்பித்துள்ளது உ.பி. யோகி ஆதித்யநாத் அரசு. பாதி வீட்டை மட்டும் முதலில் இடிப்பார்கள். கிரிமினல்கள், தேடப்படும் குற்றவாளிகள் சரணடைந்து விட்டால் மிச்ச வீடு தப்பும். இல்லாவிட்டால் அதையும் இடித்து விடுவார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் முஸ்லீம்கள் என்பது முக்கியமானது.

இதே டெக்னிக்கை முஸ்லீம்களுக்கு எதிராக தற்போது மத்தியப் பிரதேசமும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜஹாங்கீர்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சி புல்டோசரைக் கொண்டு தனது அரசியலை நடத்தியுள்ளது. டெல்லி மாநகராட்சி பாஜக வசம் உள்ளது. டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் வருகிறது.

ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகள், கடைகளை இடிக்க புல்டோசர்களுடன் குவிந்தது டெல்லி போலீஸ். இந்த ஆக்கிரமிப்பை சுப்ரீம் கோர்ட் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் டெல்லியைப் போலவே கர்நாடகத்திலும் புல்டோசர்களைப் பயன்படுத்துவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஞானேந்திரா கூறுகையில், வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக, டெல்லி போலீஸார் நடந்து கொண்டதை போல புல்டோசர்களைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். வன்முறையில் ஈடுபட்டோருக்குச் சொந்தமான வீடுகளை இடித்துத் தள்ளுவோம். இதுதொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தப்படும். முதல்வரும் கூட இதே போன்ற சிந்தனையில்தான் உள்ளார். வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக நாமும் அவர்களது பாணியில்தான் டீல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் சரிப்பட்டு வருவார்கள் என்றார் ஞானேந்திரா.

ராமநவமியன்று வட மாநிலங்களில் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதேபோன்ற கலவரம் கர்நாடகத்திலும் கூட நடந்தது. கர்நாடகத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான செயல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது புல்டோசர் அரசியலையும் கையில் எடுப்போம் என்று கர்நாடக அமைச்சரே பகிரங்கமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆக்கிரமிப்பு அகற்றம்
தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாடு முழுவதும் புல்டோசர் அரசியலை பாஜக பரப்பி வருவதாக தலைமை நீதிபதியிடம் புகார் கூறப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.