புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் குவியும் முதலீடுகள் காரணமாக 2.4 லட்சம் வேலை வாய்ப்புகள் அங்கு உருவாகவுள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு சலுகை அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவும், தொழில் தொடங்கவும் வகை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஓராண்டில் ரூ.52,155 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
இதன்மூலம் 2.4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி நிலவரப்படி 1.36 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 71,603 வேலை வாய்ப்புகள் ஜம்முவைச் சேர்ந்தவர்களுக்கும், 65,376 வேலை வாய்ப்புகள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைத்துள்ளன.
தொழில் தொடங்க 39,022 ஒரு கனால் என்பது (505 சதுர மீட்டர்) கோரப்பட்டிருந்த நிலையில் 17,970 கனால் பரப்பு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் மட்டும் ரூ.5,193 கோடி அளவுக்கு ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், சுகாதாரம், சமூக சேவை துறைப் பிரிவில் முதலீடுகள் அமையவுள்ளன. மேலும் ஆட்டோமொபைல், மனமகிழ் மன்றங்கள், வேர்ஹவுஸிங், கைவினைப் பொருட்கள் பிரிவில் ரூ.5,416 கோடிக்கு ஜம்முவிலும், ரூ.2,157 கோடிக்கு காஷ்மீரிலும் முதலீடுகள் அமையவுள்ளன. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.