பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இரவில் சுற்றி வந்த 19 வயது இளைஞரை வடவள்ளி காவல்துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் மருதமலை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் விடுதி பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதியில் தங்குவதற்கு அச்சமாக இருப்பதாகவும் கூறி கடந்த 31.03.2022 ம் தேதியன்று பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பல்கலைக்கழக நுழைவுவாயிலின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தேக நபரின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் மாணவி, மாணவியரிடத்தில் கொடுத்த உத்திரவாதத்தை ஏற்று கலைந்து சென்றனர்.
கடந்த 10.04.2022ஆம் தேதி அதிகாலை பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லேப்டாப் எடுக்க முயற்சித்ததாகவும், பல்கலைக்கழக பதிவாளர் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட வடவள்ளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், பேரூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து சந்தேக நபர் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 21.04.2022ஆம் தேதி அதிகாலை கல்வீராம்பாளையம், டான்சா நகர் பகுதிகளில் கண்காணித்தபோது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சுரேந்தர் (வயது 19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் கல்வீராம்பாளையம் மாரியம்மான் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. தான் கடந்த சில நாட்களாக பாரதியார் பல்கலைக்கழக விடுதி பகுதியில் சுவர் ஏறி குதித்து சென்றதாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுவர் ஏறி குதித்து சென்று லேப்டாப் திருட முயன்றதையும் ஒப்புக்கொண்டதை அடுத்து அந்நபர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியாமலிருக்க பலகலைக்கழக விடுதியிலுள்ள மாணவிகளின் உடைகளை தன் உடை மீது அணிந்து உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM