மும்பை:
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இந்த சீசனில் முதல் முறை நேருக்கு நேர் மோதுகின்றன. இதுகுறித்து ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போன்ற உணர்வை தருகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
நான் மும்பை அணியிலும் விளையாடி இருக்கிறேன். சென்னை அணியிலும் விளையாடி இருக்கிறேன். இரண்டுமே எனக்கு முக்கியமான அணிகள். நான் மும்பையில் இருந்து வெளிவந்து சென்னையில் இணைந்து விளையாடியபோது, இரண்டு அணிகளும் மோதினால் அத்தனை பிரஷராக இருக்கும். இப்போதும் அது தொடர்கிறது.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.