உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா இன்னும் 20 நாட்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடிவு செய்துள்ளது என பிரித்தானிய பாதுகாப்புத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மே 9-ஆம் திகதிக்கு முன்னதாக உக்ரைனில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் துடிப்பதாகவும், அதற்காக டான்பாஸ் பகுதியில் அதிகப்படியான ரஷ்ய துருப்புகளை களமிறக்கி கடுமையான போரில் தள்ளக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் சரணடைந்ததைக் குறிக்கும் இந்த நாள், ரஷ்ய இராணுவ நாட்காட்டியில் ஒரு முக்கிய திகதியாகும். இந்த நாளில் மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் வருடாந்திர அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த நாளை இம்முறை மேலும் சிறப்பாக கொண்டாடுவதற்காக, கடந்த ஏட்டு ஆண்டுகளாக கைப்பற்ற முயற்சிக்கும் உக்ரைன் நிலத்தை, விளாடிமிர் புடின் தனது படைகளை அனுப்பி, நன்கு பயிற்சி பெற்ற உக்ரேனிய இராணுவப் பிரிவுகளிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறார்.
உக்ரைனிய இராணுவ படைகள் கடந்த 2014 முதல் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், டான்பாஸில் இப்போது அதிகமான ரஷ்யப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன் சமீபத்திய உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, “ரஷ்யப் படைகள் இப்போது டான்பாஸில் உள்ள ஸ்டேஜிங் பகுதிகளிலிருந்து கிராமடோர்ஸ்க் நோக்கி முன்னேறி வருகின்றன, இங்கு தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.