திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் கிராம மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில், சாதி மத பேதமின்றி கிராம மக்களை இணைக்கும் மீன்பிடி திருவிழா பல ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக குளத்தில் நீர் தேங்காததால் இந்த விழா நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகம் பெய்தததால் நீர் தேங்கியது. இதையடுத்து குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மீன்கள் பெரிதான நிலையில், இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் திரளாக குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர்.
முன்னதாக குளக்கரையில் உள்ள கன்னிமார் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. ஊர் நாட்டாமை வெள்ளை துண்டை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து குளத்திற்குள் இறங்கிய கிராமமக்கள் மீன்களைப் பிடித்தனர். பெரியகோட்டை, புகையிலைப்பட்டி, ராஜக்காபட்டி, சாணார்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
தேளி,விரால், ஜிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட பல வகையான மீன்கள் பிடிபட்டது.மன் மணம் கொண்ட கிராமங்களில் இன்று மீன் குழப்பு மணம் வீசியது.