விருதுநகரில் அரசு மருத்துவமனை மருந்து குடோனில் மழைநீர் புகுந்து, மருந்து மாத்திரைகள் வீணான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பழமை வாய்ந்த நூலக கட்டிடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், இந்த பழமை வாய்ந்த கட்டிடத்தை மருத்துவப் பொருட்கள் சேமிப்பு குடோனாக பயன்படுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, மழை நீர் புகுந்ததில் உள்ளே வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகள், மழை நீரில் நனைத்து வீணானது. 3 நாட்களுக்குப் பிறகு மருந்து பொருட்கள் எடுக்க சென்றபோது, இதனைக் கண்ட ஊழியர்கள் மாத்திரைகளை தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தும் முயற்சி மேற்கொண்டதாகவும், இதனை கண்ட பொதுமக்கள் மருத்துவமனையில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மருந்து பொருட்கள், பாழடைந்த கட்டிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருந்துப் பொருட்கள் சேமிப்பு குடோனை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி, மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கலு சிவலிங்கத்திடம் கேட்டபோது, மழையில் நனைந்த மருந்து மாத்திரைகளை காலாவதியாக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பாதுகாப்பான இடத்தில் மருந்து குடோனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM