மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது கோடநாடு எஸ்டேட்டின் காவலாளியாக ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் முக்கிய நபரான கனகராஜ் என்பவரும் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். அதைத்தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான சயானும் தனது குடும்பத்தினருடன் கேரளா சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் தன் மனைவியையும், குழந்தையையும் பறிகொடுத்தார். ஆனால் அவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழக்கு விசாரணை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 202 பேரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக விகே சசிகலாவிடம் நீலகிரி தனிப்படை காவல்துறையினர் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணையை தொடங்கினர்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், சொத்துக்கள், நகைகள் தொடர்பாக சசிகலாவிடம் பல கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியது.
சசிகலாவிடம் கொடநாடு வழக்கு குறித்து உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை நடைபெற்றது.
மாலை 5 மணி அளவில் சசிகலாவிடம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது.
ஐ.ஜி சுதாகர் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவிடம் விசாரணை நடத்திய நிலையில், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.