மேகமலையில் மேய்ச்சல் உரிமையை பறிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!

மேய்ச்சல் உரிமையை பறிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலசெயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, மேகமலையில் மலைமாடுகள் மேய்க்க தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், வனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க மாநிலம் முழுவதும் தடை விதித்து மார்ச் 4 ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு ஆதிவாசிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பவர்களிடம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி மேற்கண்ட தீர்ப்பில் மார்ச் 17 ஆம் தேதி நீதிபதிகள் திருத்தம் செய்தனர்.

அந்த தீர்ப்பில் “புலிகள் சரணாலயம், வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்தும், இதர வனப்பகுதிகளில் தமிழ்நாடு வனச்சட்ட விதிகளுக்குட்பட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வன உரிமைச் சட்டம் 2006 மேய்ச்சல் உரிமையை அங்கீகரித்திருக்கிறது. இதற்கு மாறாக நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், மாநிலம் முழுவதும் வன நிலங்களில் கால்நடைகள் மேய்க்க அதிகாரிகளின் கருணையை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய அவல நிலைக்கு ஆதிவாசி மக்களும், வன ஓர விவசாயிகளும், நாடோடியாக கால்நடைகள் மேய்ப்பவர்களும் ஆளாவார்கள். 

மேலும், கால்நடைகள் எண்ணிக்கை குறைந்து வனவளம் குறைவதுடன், சுற்றுச்சூழல் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். மக்களுக்கான அசைவ உணவு கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கை வேளாண்மைக்கு தேவையான எருவும் கிடைக்காமல் போகும்.

எனவே, பலவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன உரிமைச் சட்டம் 2006 மக்களுக்கு வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு உட்பட 8 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 96 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜமீன் காலத்திற்கு முன்பிருந்தே பிற்காலத்தில் அரசால் வன நிலங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருந்தும், விவசாயம் செய்தும் வருகின்றனர். 

இவர்கள் அனைவரையும் நான்கு மாத காலத்திற்குள் வெளியேற்ற வேண்டுமென்றும், இதற்கென்று சிறப்பு காவல் படையை அமைக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கு எதிராக சிறப்பு காவல்படை அமைக்க வேண்டுமென்பது ஏற்கத்தக்கதல்ல. 

எனவே, தமிழ்நாடு அரசு இம்மக்களின் குடியுரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை வெளியேற்றக் கூடாது” 
இவ்வாறு அந்த அறிக்கையில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.