நடிகர் விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் 3-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகியப் படங்களுக்கு பிறகு, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
‘மாமனிதன்’ படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்காக பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து ‘தர்மதுரை’ படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், ‘மாமனிதன்’ படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றார். இதனையடுத்து ரிலீஸ் பணிகள் வேகம் பிடித்தன. இந்தப் படம் வரும் மே 6-ந் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஜயசேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம், இந்த மாத இறுதியில், வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாவதால், விஜய் சேதுபதியின் மற்றொரு படமான ‘மாமனிதன்’ படத்தின் வசூல் பாதிக்கும் என கருதிய படக்குழு மீண்டும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. அதன்படி, இந்தப் படம் மீண்டும் மே 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் சமீபத்தில் புதுச்சேரியில் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீசும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. அதன்படி, இந்தப்படமானது ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமியும், ஆர்.கே. சுரேஷும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.
அதில், “விஜய்சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதால், ‘மாமனிதன்’ திரைப்படத்தின் வெளியீடு மே 20-ம் தேதியிலிருந்து ஜூன் 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. ‘மாமனிதன்’ திரைப்படம் தமிழகத்தில் 400 திரையரங்குகளிலாவது வெளியாக வேண்டும். திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மாமனிதன்’ படம் வெளியாக இருந்த அதே மே 20-ம் தேதியில், உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.