Oh My Dog விமர்சனம்: குழந்தைகளுக்கான படம்தான்; ஆனா கொஞ்சம் புதுசாவும் யோசிச்சிருக்கலாமே?!

விழித்திறன் சவால் கொண்ட ஒரு நாய், எப்படி அன்பினால் உலகத்தை வெல்கிறது என்பதுதான் அமேசான் ப்ரைமில் வெளியான `ஓ மை டாக்’ (Oh My Dog) படத்தின் ஒன்லைன்.

வில்லனான ஃபெர்னாண்டோ (வினய்) நாய் பிரியர். ஒவ்வொரு ஆண்டும், அவர் வளர்க்கும் நாய்கள்தான் நாய் கண்காட்சிப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளும். வெள்ளை டை அடித்த தலை, கோமாளித்தனமான அடியாள்கள் என்றவுடன், ‘ஏ நம்ம 101 டால்மேஷியன்ஸ் க்ரூயல்லடா’ எனத் தோன்றலாம். க்ரூயல்லா போலவே வித்தியாசமான உடைகள் அணிபவர்தான் ஃபெர்னாண்டோ. ஆனால், நாய் முடிக்காக நாய்களைக் கொல்பவர் அல்ல. நாய்ப் போட்டிகளில் வென்று ஊருக்குள் பெரிய ஆளாக இருப்பவர்.

‘தகுதி’யானவை மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கை உடையவர். அவர் வளர்க்கும் சைபீரியன் ஹஸ்கி போடும் குட்டிகளில் ஒரு குட்டி மட்டும் பார்வை சவால் கொண்டு பிறக்க, அந்தக் குட்டியை கொன்றுவிடச் சொல்கிறார் ஃபெர்னாண்டோ. ஆனால், விதி வசத்தால் அந்தக் குட்டி தப்பிவிடுகிறது.

Oh My Dog

அந்தக் குட்டி எப்படித் தடைகளை எல்லாம் தாண்டி தனக்கான இடத்தில் மீண்டும் அமர்கிறது என்பதுதான் ‘ஓ மை டாக்’ படத்தின் கதை. ஏது, இதான் கதையா, அப்ப ஹீரோ எங்கே என்கிறீர்களா… இது இன்ட்ரோ சீன் மட்டுமே.

தப்பி வந்த குட்டியை எடுத்து ‘சிம்பா’ என பெயர் வைத்து வளர்க்கிறார் அருண் விஜய்யின் மகன் அர்னவ். அன்பும், அறமும் என இருக்கும் அருண் விஜய் குடும்பத்தார் இந்த நாயை வளர்க்கின்றனர். சிம்பா வளர்ந்து நாய்கள் போட்டி வரை சென்று தன்னைத் தூக்கி எறிந்த வில்லனுக்கே சவால்விட, வில்லன் வெர்சஸ் ஹீரோ யுத்தத்தில் பணபலமும் மோத, சிம்பா எப்படி அன்பினால் இந்த உலகை வெல்கிறது என்பதுதான் கதை.

அன்பான குடும்பமாக இருந்தாலும், போதிய வசதி இல்லாததால், கடனில் மூழ்கித் தவிக்கிறார் அருண் விஜய். பேரனின் படிப்புக்காக வீட்டை அடமானம் வைத்தது குறித்து கோபம் கொள்கிறார் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார். இப்படியான சூழலில் நாய்க்கும் புதிது புதிதாக செலவுகள் வருகின்றன. இதையெல்லாம் அருண் விஜய் எப்படிச் சமாளிக்கிறார்; தன் மகனுக்கு எப்படியானதொரு தந்தையாக இருக்கிறார் என்பதாக இன்னொரு கிளைக்கதையும் செல்கிறது.

எந்தவித ஹீரோயிசமும் பெரிதாக இல்லாத கதை. அதைத் தேர்ந்தெடுத்து அண்டர்பிளேவும் செய்திருக்கிறார் அருண் விஜய். சில நிமிடங்களே வந்தாலும் அந்த சூப்பர்ஹீரோ காட்சிகள் செம்ம! அருண் விஜய்யின் ஜிம் உடலுக்கும், ஹேர்ஸ்டைலுக்கும், உண்மையிலேயே அப்படியானதொரு வாய்ப்பு வந்தால், அவர் நிச்சயம் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். எமோஷனல் காட்சிகளில் அர்னவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Oh My Dog

கேம் ஆஃப் த்ரோன்ஸின் மூலம் அதன் நடிகர்களுடன் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த இன்னொரு விஷயம் சைபீரியன் ஹஸ்கி வகை நாய்கள். பார்ப்பதற்கு ஓநாய்கள் போல இருக்கும் இவை, நாய் என்பதே பலருக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் டக்கென நம்மை ஈர்ப்பதில் இந்த வகைமை நாய்கள் கெட்டிக்காரர்கள். படத்தில் வரும் குட்டி நாய் அவ்வளவு க்யூட். கொஞ்சம் வளர்ந்ததாகக் காட்டப்படும் நாயும் அட்டகாசமாக நடித்திருக்கிறது.

குழந்தைகள் படத்தில் ஒரு நாய் என்பதால் முழு கவனத்தையும் நாயின் பக்கம் திருப்பிவிடாமல், குழந்தைகளுக்கும் அவர்தம் குடும்பப் பின்னணிக்கும் நிறைய காட்சிகளை ஒதுக்கியிருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம். அதனாலேயே பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரத்யேகமாக குழந்தைகளுக்கானதொரு படமாக உருவெடுத்திருக்கிறது ‘ஓ மை டாக்’. அந்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறார் சரோவ். நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், குழந்தைகள் பாடும் முதல் பாடலும் செம்ம.

Oh My Dog

அதே சமயம், குழந்தைகளுக்கான புத்தகங்களில் இருக்கக்கூடிய நீதிக் கதையை அப்படியே பக்கம் மாறாமல் எடுத்திருக்கிறார் சரோவ் சண்முகம். அதனாலேயே சில கதாபாத்திரங்களின் உடை, ஜோக் எல்லாம் அரதப் பழசானது எனத் தோன்ற வைக்கின்றன. குழந்தைகள் படம் என்றாலே ‘சுட்டிக் குழந்தை’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் முட்டாள் வில்லன் அடியாட்கள் கதாபாத்திரங்கள் இதிலுமே நீள்கின்றன.

போதாக்குறைக்கு, அடுத்து இதுதானா, என நினைத்தால், அதுவே நடந்து நம்மை சோதிக்கிறது. எந்தவொரு காட்சியிலும் புதுமை இல்லாததால், அடுத்தடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்க முடிந்துவிடுகிறது. காட்சிகளில் புதுமை இல்லாவிட்டாலும், இந்தக் காலத்துக்கேற்ப சில காட்சிகளையாவது எழுதியிருக்கலாம். வில்லன் வினய்யின் வசனங்கள், மிரட்டல் எல்லாமே 80ஸ் சினிமாவுக்கான க்ளீஷேவாகவே நின்றுவிடுகின்றன. கடைசியில் போட்டியில் ட்விஸ்ட் என்று யோசித்ததுகூட யூகிக்கும் வகையறாவே!

எது எப்படியிருந்தாலும், குழந்தைகள் நிம்மதியாக ஒரு தமிழ் சினிமா பார்க்க வேண்டும் என்றால், அமேசான் ப்ரைமில் Oh My Dog-ஐ க்ளிக் செய்யலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.