வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் மின் உற்பத்தி அளவில் நான்கில் ஒரு பங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் கண்காணிப்பு அறிக்கை மூலம் தெரிய வருகிறது.
இந்திய மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை சார்ந்து உள்ளது. கோவிட் பாதிப்பிற்கு பின்னர் தொழில் நிறுவனங்கள் முழு அளவு இயங்குவதால் மின் தேவை அதிகரித்துள்ளது. கடுமையான கோடை வெப்பத்தினால் வீட்டு மின் தேவையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இறக்குமதியும் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி நிலக்கரியை கொண்டு செல்லும் ரயில் ரேக்குகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
மத்திய மின்சார ஆணையத்தின் செயல்திறன் கண்காணிப்பு அறிக்கையின் படி, ஏப்ரல் 20 வரை அனல், அணு மற்றும் நீர் மின் நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தம் 72,074 மெகாவாட் நிறுத்தப்பட்டிருக்கிறது. இது மொத்த கண்காணிப்பு திறனான 289,581 மெகாவாட்டில் கிட்டத்தட்ட 25% ஆகும். ஏப்ரல் தொடக்கத்தில், நிறுத்தப்பட்ட மொத்த அளவு 66,534 மெகாவாட்டாக இருந்தது. தற்போது நிலக்கரி பற்றாக்குறையால் அதிக யூனிட்கள் முடங்கியுள்ளன.
நிறுத்தப்பட்டுள்ள 72 ஆயிரம் மெகாவாட் அளவிலான மின்சாரத்தில், 9,744 மெகாவாட் பராமரிப்புக்காக முன்னரே நிறுத்த திட்டமிடப்பட்டது. 38,826 மெகாவாட் அளவு மின்சார உற்பத்தி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிற காரணங்களால் 23,503 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஏப்ரல் 20 நிலவரப்படி, உள்நாட்டு நிலக்கரியில் இயங்கும் 150 மின் உற்பத்தி நிலையங்களில் 86ல் நிலக்கரி அளவு மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 5 அலகுகளில் நிலக்கரி இருப்பு முக்கிய அளவை விட கீழே சரிந்துள்ளது.
8 மணி நேர மின் தடை!
மின் விநியோக பிரச்னை காரணமாக வடக்கில் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப், தெற்கே ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 6 முதல் 8 மணி நேர மின் தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்திருப்பதால் ஜெனரேட்டர்கள் மூலம் ஆலைகளுக்கு மின் உற்பத்தி என்பதும் அதிக செலவு வைப்பதாக உள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு பிரச்னை உள்ள நிலையில், மின் தட்டுப்பாடு உற்பத்தியை பாதித்து மேலும் விலைவாசியை அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
Advertisement