புதுடெல்லி: கோ-லொகேஷன் (co-location) ஊழல் வழக்குத் தொடர்பாக தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ தனது அறிக்கையில், சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முக்கிய முடிவுகளில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
முடிவுகள் எடுப்பதில், உருவமில்லாத யோகி ஒருவர் தன்னை மின்னஞ்சல் மூலமாக வழிநடத்தினார் என சித்ரா ராமகிருஷ்ணா விசாரணையின் போது தெரிவித்திருந்தார். அந்த உருவமில்லாத யோகி வேறு யாரும் இல்லை, சித்ராவின் முடிவுகளால் ஆதாயம் அடைந்த ஆனந்த் சுப்ரமணியன் தான்.
கடந்த 2013-ல் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ ரவி நாராயணுக்கு பின்னர் அந்த பொறுப்புக்கு வந்த சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணினை தனது ஆலோசகராக நியமித்தார். பின்னர் வருடத்திற்கு ரூ. 4.21 கோடி சம்பளத்தில் குழும செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார்.
சுப்பிரமணியனின் சர்ச்சைக்குரிய நியமனம், அடுத்தடுத்து வழங்கப்பட்ட பதவி உயர்வு, முக்கிய முடிவுகளின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வழிநடத்தப்பட்டது, அவர் இமயமலையில் வசிக்கும் மர்மான யோகி என சித்ரா கூறியது சிபியின் உத்தரவின் பேரில் சித்ராவின் மின்னஞ்சல்கள் ஆய்வு செய்த போது தெரிய வந்தது.
சித்ரா ராமகிருஷ்ணா 2013ம் ஆண்டு ஏப் 1ம் தேதி தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அலுவலராக உயர்த்தப்பட்டார். 2016ம் ஆண்டு அவர் என்எஸ்இ-யைவிட்டு வெளியேறினார். இந்த காலக்கட்டத்தில் தான் என்எஸ்இ மூலம் கோ லொகேஷன் தொடங்கப்பட்டது என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி ஆனந்த் சுப்ரமணியனும், மார்ச் 6ம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.