நீலகிரி தமிழக அரசின் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனச்சரகத்தில் உள்ள தமிழக அரசின் தேயிலை தோட்டத்தில் 13 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. யானைகள் முகாமிட்டு சுற்றித் திரிவதால் தேயிலை பறிக்க வந்த தோட்ட தொழிலாளர்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவித நிகழாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சேரம்பாடி வனச்சரக அதிகாரிகள் மற்றும் யானை கண்காணிப்பு பணியாளர்கள் இப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பந்தலூர் சேரம்பாடி நெடுஞ்சாலை பகுதியை யானைகள் எந்த நேரத்திலும் கடந்து செல்லலாம் என்பதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.