தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால்தான் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.
சமூகநலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமாரவேல், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, திமுக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்துப் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 2018-ம் ஆண்டு முதல் அத்திட்டத்தை அதிமுக அரசு தான் கிடப்பில் போட்டதாகவும், நீங்கள் விட்டுச்சென்ற 3 லட்சத்து 59 ஆயிரத்து 455 பயனாளிகளுக்கு அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கூறினார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தது காரணமாகவும், அத்திட்டத்துக்கான டெண்டர் எடுக்க யாரும் முன் வராத காரணமாகத்தான் திட்டம் காலதாமதாகவும், இத்திட்டம் மோசமான திட்டம் அல்ல என்றும், அத்திட்டத்தை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தங்கம் வழங்கும் திட்டத்தை மோசம் என்று கூறவில்லை. திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது. திட்டம் முறையான நபர்களுக்கு சென்று சேரவில்லை. குறைபாடுகளை புரிந்து கொண்டு அறிந்து கொண்டு தான் அத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது மீண்டும் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து, திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை அதிமுக மாற்றியமைத்ததை தெரிவித்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவை மாற்றப்பட்டது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டுனார். மேலும் திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து அதற்குப் பிறகும் தாலிக்கு தங்கம் பயனாளிகளை சென்றடையவில்லையென தெரிவித்தார். மீண்டும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய மக்களுக்காக தான் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மக்களின் நலன் கருதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதற்காக அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதோ, அது பயனாளிகளை சென்றடையவில்லை என்று கூறினார். வீடு, வாகனம் வாங்க வங்கிகளில் கடன் கொடுப்பார்கள், ஆனால், திருமணத்திற்கு வங்குகளில் கடன் கொடுப்பதில்லை. திருமணத்தின் போது, தாலிக்கு தங்கம் கிடைத்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால் திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து செல்வதால், அதற்கான இலக்கு பயனாளிகளை சென்றடையவில்லை, என தெரிவித்தார்.
தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு கல்வித்தகுதி வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் படிக்கும்போதே நிதி உதவி வழங்கப்படுவதால் அத்திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM