மதுரை: “அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது: “திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர். திமுக ஆட்சி என்றாலே தமிழகத்திற்கு இருண்ட காலம் என்பது வரலாறு. திமுக ஆட்சி தவறான பாதையை நோக்கி செல்கிறது. இந்த ஆட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாபெரும் தோல்வியை இந்த ஆட்சியாளர்கள் அரசு சந்தித்துள்ளனர்.
ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. கொடநாடு கொலை வழக்கில் கொலையாளிகளை, உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியை குறை சொல்ல வேண்டியது இல்லை. அனைத்திலும் அரசியல் செய்ய வேண்டியதில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள கவனமாக இருக்க வேண்டும்.
அதிமுகவை கைப்பற்றுவது என்பது யானைப்படை, குதிரைப்ப டையோடு சென்று கைப்பற்றுவது இல்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம். கைப்பற்றுவோம் என்பது இல்லை. இழந்ததை மீட்டெடுப்போம். ஜெயலலிதா ஆட்சி நடைபெற அதிமுகவை மீட்டெடுப்போம். கடந்த கால தேர்தல் தோல்விகளை கடந்து தமிழக மக்களின் ஆதரவோடு அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகளை செய்கிறோம்.
பொதுவாக சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இல்லையென்றால் எதிராக இருப்பார்கள். அதற்கு சினிமா கலைஞர்களும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவோம். அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக.
முசிறியில் சசிகலா வருகைக்காக அமமுக நிர்வாகிகள் அதிமுக பேனர் மற்றும் கொடிகளை வைத்து வரவேற்ற நிலையில் அவர்கள் நீக்கப்பட்டனர். அது சசிகலாவை வரவேற்றதற்காக நீக்கவில்லை. அவர்களுக்கு எதிராகவும் செய்யவில்லை. பெயரை தவறாக பயன்படுத்தியதால் நீக்கப்பட்டனர். சின்னம்மா ஜனநாயக வழியில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். வானைத்தை பார்த்து காத்திருந்ததை போல இல்லாமல் தேர்தலில் சின்னத்தோடு நின்று வெற்றிபெற்று சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவோம். சின்னம்மா சட்டம் போராட்டம் நடத்தி மேல்மூறையீடு செய்வார்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.