திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளம் மூலம் இவர்களுக்கு ஏற்பட்ட இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி, இருவரும் தங்களது செல்போனை பகிர்ந்து கொண்டு தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் நேரில் சந்தித்து, கடந்த ஆறு மாதமாக இருவரும் ஒரே வீட்டில் (லிவிங் டூ கெதர்) வசித்து வந்துள்ளனர். அப்போது அந்த இளம் பெண்ணிற்கு அந்த வாலிபர் உடல் ரீதியான பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், அந்த வாலிபர் தனது தந்தை வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், அவரிடம் நமது திருமணம் குறித்து சம்மதம் வாங்க நான் ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
வெகு நாட்களாகியும் காதலன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண், நேராக கேரளா சென்று அந்த வாலிபரின் பெற்றோரிடம் நடந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். ஆனால் அதனைக் காதில் வாங்காத அந்த வாலிபரின் பெற்றோர்கள், இளம்பெண்ணை கண்டுகொள்ளாமல் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த வாலிபரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மஞ்சேரி காவல் நிலைய போலீசார், அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த வாலிபர் மற்றும் அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே விவகாரம் போலீசாரிடம் சென்றதால் அந்த வாலிபர் மட்டும் அவரின் பெற்றோர்கள் வீட்டின் பின்புறமாக தப்பி தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.