மதுரை: மதுரையில் மாநகராட்சி கடைகளுக்கு முறையாக வாடகை செலுத்தாமல் அதன் உரிமையாளர்கள் ரூ.42 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த நிலையில், பாக்கியை வசூலிக்கும் வகையில் முதல்கட்டமாக 138 கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில் வரி, குத்தகை வரி மற்றும் கடைகள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இடங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக இதில் சொத்து வரி மட்டும் ரூ.97.03 கோடி வரை வருவாய் கிடைக்கும். இந்த வருவாய் இல்லாத இடங்களில் கடைகள் வாடகை முக்கியமானதாக கருதப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் மொத்தம் 6,285 கடைகள் ஏலம் விடப்படப்பட்டுள்ளன. வரி இல்லாத வருவாய் இடங்களான இந்தக் கடைகள் வாடகை மூலம் மட்டும் மாநகராட்சிக்கு ரூ.59 கோடியே 40 லட்சம் வருவாய் கிடைக்கிறது. தற்போது இந்த வருவாயில் ரூ.17 லட்சம் வசூலாகியிருக்கிறது. மீதி ரூ.42 கோடியே 5 லட்சம் ரூபாய் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது.
இந்தப் பணத்தை வசூல் செய்ய மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் தற்போது நீண்ட காலம் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து அடைத்து வருகின்றனர். இதுவரை 138 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள், வாடகை பாக்கியை செலுத்தியப் பின்னர் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கடைகளை திறந்து விடுகின்றனர்.
ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள், மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்த முடியாமல் கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் சிபாரிசு செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், மாநராட்சி ஆணையாளர் நிலுவை கடை பாக்கியை எந்த சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் கறாராக வசூல் செய்ய உத்தரவிட்டார். அதனால், கவுன்சிலர்கள் சிபாரிசு இந்த விவகாரத்தில் எடுபடவில்லை. அதனால், கடை உரிமையாளர்கள் கடை பாக்கி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: “தற்போது மொத்த கடைகளில் 50 சதவீதம் அவற்றை ஏலம் எடுத்த உரிமையாளர்களிடம் இல்லை. அவர்கள் உள்வாடகைக்கு மற்றவர்களுக்கு விட்டுள்ளனர். அதனால், கடைகளை கடை உரிமையாளர்களுக்கும், தற்போது அதனை நிர்ணயிப்பவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்ற வழக்குகள் உள்ளன. இதுபோல் 2,380 கடைகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் நடக்கிறது.
ஆனால், அந்தக் கடைகளிலும் வாடகையை நிலுவையில் இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால், இந்த நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முடியாத கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். சீல் வைத்த கடைகளுக்கு நிலுவை வாடகையை செலுத்தப்படாவிட்டால் அந்தக் கடைகளை மாநகராட்சி கைப்பற்றி மீண்டும் மறு ஏலத்திற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.