கடலூர்: தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்வாகம் கட்டச் சொல்வதைக் கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்து மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு நெருக்கடியை தந்து வந்தது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் வாங்கப்படும் கல்விக் கட்டணத்தை தான் கட்டுவோம் என்று கூறி கடந்த 10 ஆம் தேதி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 11 நாட்கள் அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகம், மருத்துவக் கல்லூரி புல முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று (ஏப்.21) காலை மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ”எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.