சென்னை: சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் கரோனா தொற்று 2020 பிப்ரவரியில் பரவத் தொடங்கியது. தமிழகத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 அலைகளாக தொற்று பரவிய நிலையில், 2-வது அலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், 3-வது அலையான ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு குறைவாகவே இருந்தது.
வரும் ஜூன் மாதம் 4-வது அலை வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு எக்ஸ்இ (XE) என்ற புதியவகை கரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டறியப்பட்டது.
இந்தியாவில் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெல்லியில் 50-க்குள் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால், பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த18 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில், மேலும் 9 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், 12 பேருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், ஐஐடி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 2,000 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 2 நாட்களில் முடிந்துவிடும். தற்போதுவரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிண்டி அரசு கரோனா மருத்துவமனை தயாராக உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு குறைந்திருந்தாலும், முழுமையாக விலகவில்லை. ரயில், பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது இல்லை. மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனே போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்இ என்ற புதிய வகை கரோனா பாதிப்பு இதுவரை இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், அதுகுறித்து கவலைப்பட தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக 39 பேருக்கு தொற்று
இதற்கிடையில், தமிழகத்தில் நேற்று ஆண்கள் 23, பெண்கள் 16 என மொத்தம் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிங்கப்பூர், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 256 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை.