புதுடெல்லி: 15வது குடிமை பணிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லி விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பிரதமர் விருதுகள் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த விருதுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும் திறனின் அடிப்படையில் ஒவ்வொரு முடிவையும் மதிப்பீடு செய்ய வேண்டும். நாட்டின் ஜனநாயக அமைப்பில் நாம் மூன்று இலக்குகளில் உறுதியுடன் இருக்க வேண்டும். முதல் இலக்கானது, நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும், அவர்களின் வாழ்க்கை எளிதானதாக இருக்க வேண்டும் அவர்களும் இதனை எளிதாக உணர வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக, உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு விஷயங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். உலக அளவிலான செயல்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் முன்னுரிமை, கவனம் செலுத்தக்கூடிய விஷயங்களை கண்டறிவது கடினமானதாக இருக்கும். மூன்றாவதாக, நாம் எந்த அமைப்பில் இருந்தாலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும் திறனை அடிப்படையாக கொண்டு முடிவுகளை மதிப்பிட வேண்டும். எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.