புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நேற்று மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்தது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களைத் தொடர்ந்து, கடந்த 16ம் தேதி டெல்லி ஜஹாங்கீர்புரியிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகளை இம்மாநில அரசுகள் இடித்து வருகின்றன. இதற்கு தடை விதிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய ஜமாய் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு கடந்த திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்தது. ஆனால், இது விசாரணைக்கு வரும் முன்பாகவே ஜஹாங்கீர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை புல்டோசர்கள் மூலம் நேற்று முன்தினம் காலை டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையால், பிற்பகலுக்கு பின்னர் இந்த இடிப்பு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல் மற்றும் ஹெக்டே ஆகியோர் தங்களின் வாதத்தில், ‘ஆக்கிரமிப்புகள் என்றாலும் கூட, புல்டோசரை கொண்டு இடிப்பது தான் மாநில அரசின் கொள்கையா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தும், ஜஹாங்கீர்புரியில் மாநகராட்சி அதிகாரிகள் எப்படி காலை 9 மணிக்கே சென்று கட்டிடங்களை இடிக்க துவங்கினர்? இதை நிறுத்தும்படி நீதிமன்றம் வழங்கிய தடையை கூட அவர்கள் மதிக்கவில்லை. டெல்லியில் 50 லட்சம் மக்கள் வசிக்கும் இடத்தில் 731 அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு காலனிகள் உள்ளன. இதில், ஒரு பிரிவினரை மட்டும் குறிவைத்து இடிப்பு பணிகளை செய்வது ஏன்? டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் உண்மையாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நினைத்தால், தெற்கு டெல்லி பகுதிக்கு வாருங்கள். இது, வி.வி.ஐ.பிக்கள் வசிக்கும் இடமாகும். அவர்கள் வைத்து இருக்கும் ஒவ்வொரு 2வது வீடும் ஆக்கிரமிப்பு தான். அதனை முதலில் நீக்குங்கள். அதை விட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக் கூடாது,’ என தெரிவித்தனர்.ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஜஹாங்கீர்புரியில் ஆண்டுக்கு 2 முறை ஆக்கிரமிப்புகள் நீக்கப்படும். ஆக்கிரமிப்புகளை நீக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றமும் கூட உத்தரவு பிறப்பித்துள்ளது,’ என்றார். டெல்லி மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ‘நாங்கள் நாற்காலிகள், மேஜைகள் ஆகியவற்றை தான் நீக்கினோம். அதற்கு முன் அறிவிப்பு என்று எதுவும் தேவையில்லை,’ என தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘நாற்காலிகள், மேஜைகளை நீக்குவதற்கு புல்டோசர்கள் தேவைப்படுகிறதா?’ என கேட்டார்.பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஜஹாங்கீர்புரி விவகாரத்தில் மனுதாரர்கள் அனைவரும் வழக்கு விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்மனுதாரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு 2 வாரத்திற்கு பின்பு மீண்டும் பட்டியலிடப்படும். அதுவரையில், ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை, அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்படுகிறது,’ என தெரிவித்தனர்.