இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலகியதை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்றவற்றுக்கு முந்தைய இம்ரான்கான் அரசுதான் காரணம் என்று ஷபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டி வருகிறார்.
இம்ரான்கான் அரசில் இருந்த எண்ணற்ற மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இந்தநிலையில், அந்த முன்னாள் மந்திரிகளை ‘விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர்’ பட்டியலில் சேர்க்குமாறு ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே சமயத்தில், முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.