இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்று செங்கோட்டையில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீக்கிய குருக்களின் புனிதமான தியாகங்களால் இன்று நாம் சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய நாடாக இருப்பதாகவும் மோடி புகழாரம் சூடினார்…
குரு தேஜ் பகதூரின் 400 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நேற்றிரவு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். குருக்கள் காட்டிய பாதையில் இந்தியா இன்று வெற்றி நடைபோடுவதாகவும் அதற்கு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதே செங்கோட்டையில் ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட குரு தேஜ் பகதூரின் உயிர்த்தியாகத்தை மோடி நினைவுகூர்ந்தார். பல தலைமுறைகளை சித்ரவதை செய்த கொடியவன் ஔரங்கசீப்பை துணிவுடன் எதிர்த்து நின்று நாட்டுக்கே உந்துசக்தியாக விளங்கிய மாவீரன் குரு தேஜ் பகதூர் என்று மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இன்று இந்தியா உலகத்திற்கே உதவுகிற நாடாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக குரு தேஜ்பகதூர் நினைவாக அவரது உருவ சின்னம் பதித்த 400 ரூபாய் சிறப்பு நாணயம், தபால் தலை போன்றவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.