மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) வருகிற மே மாதம் 2-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
நம் நாட்டின் அரசுப் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஐ.பி.ஒ. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே வெளியாவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால், ரஷ்ய நாடானது உக்ரைன் நாடு மீது போர் தொடுத்ததன் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டன. இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தையும் கணிசமான இறக்கம் கண்டது.

இந்த நிலையில், எல்.ஐ.சி நிறுவனப் பங்கு ஐ.பி.ஒ மூலம் வெளியிடப்பட்டால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்தது. தவிர, எல்.ஐ.சி பங்குகளுக்கு நல்ல மதிப்பும் கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது. இதனால், எல்.ஐ.சி ஐ.பி.ஒ வெளியீட்டை சந்தை ஓரளவுக்கு சரியாகிற வரை ஒத்திவைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்தது.
இப்போது ரஷ்ய – உக்ரைன் போர் பதற்றம் ஓரளவு தணிந்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்திலிருந்து ஓரளவுக்கு மீண்டுவந்துள்ளது. இந்த நேரத்தில், எல்.ஐ.சி ஐ.பி.ஒ.வை வெளியிடுவதே சரி என மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. எல்.ஐ.சி ஐ.பி.ஒ வெளியிடும் தேதி இந்த வாரத்துக்குள் முடிவு செய்யப்படும் என இரண்டு நாள்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், வருகிற மே 2-ஆம் தேதி எல்.ஐ.சி ஐ.பி.ஒ வெளியிடப்படலாம் என்கிற தகவல் நேற்று வெளியாகியுள்ளது.

ஆனால், `இந்த ஐ.பி.ஒ.வை செயல்படுத்தும் ஆங்கர் இன்வெஸ்டார்கள் தொடர்பான விவரங்கள் தெளிவாக இல்லை. எனவே, முதலில் அதைத் தெளிவுபடுத்துங்கள். அதன்பிறகு, ஐ.பி.ஒ தேதியை முடிவு செய்யலாம்’ என எல்.ஐ.சி.யிடம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு ரூ.6 – ரூ.7 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், இதில் 10% அதாவது, ரூ75,000 கோடிக்கு ஐ.பி.ஒ வெளியிடப்படும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு இப்போது எல்.ஐ.சி ஐ.பி.ஒ மூலம் ஈட்டுவது கடினம் என்றும் சொல்லப்படுகிறது. ஐ.பி.ஒ மூலம் கிட்டத்தட்ட ரூ.21,000 கோடி, க்ரீன் ஷூ ஆப்ஷன் மூலம் ரூ.9,000 கோடி என மொத்தம் ரூ.30,000 கோடிக்கு முதலீட்டைத் திரட்ட எல்.ஐ.சி நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆக, எல்.ஐ.சி ஐ.பி.ஒ வருவதற்கு வெகு காலம் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது!