புதுடெல்லி: “நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் யோகாவை இணைக்க வேண்டியது அவசியம்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
தேசிய மருத்துவ அறிவியல் அகடமியின் 62-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
நாட்டு மக்களுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பதற்கு நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் யோகா போன்றவற்றை இணைக்க வேண்டியது அவசியம். ஆயுர்வேதா மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உடல்நலத்தை பாதுகாப்பதில் சிறந்த பங்காற்றுகின்றன. நவீன மருத்துவ முறைகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றன.
இந்தச் சூழ்நிலையில், இரண்டையும் இணைத்து மக்களுக்கு முழுமையான சுகாதார சேவைகளை வழங்க வேண்டியது அவசியம். கரோனா தொற்று பரவிய போது, அதை இந்தியா கையாண்ட விதத்தைப் பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டது. அதற்கும் மேலாக குறைந்த காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் தடுப்பூசிகளை அதிகளவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தோம்.
இந்தியாவில் மனித வளத்துக்கும், திறமைக்கும் என்றைக்கும் குறை இருந்ததில்லை. ஆராய்ச்சிகளும், புதுமைகளும் இருந்தால் எந்த நாடும் வளர்ச்சி அடையும். குஜராத்தில் உள்ள தோலாவிரா, லோத்தல் ஆகிய இடங்களில் அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. அந்த இடங்களில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிகம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. அந்தக் காலத்தில் நமது அறிவியல் எந்தளவுக்கு முன்னேறிய நிலையில் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, தேசிய மருத்துவ அறிவியல் அகடமி மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை கொண்டு வருவதற்கு அகடமி பாடுபட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மாண்டவியா பேசினார்.