சென்னை: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா நோய் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.