கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லம் பகுதியைச் சேர்ந்த 21 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ராஜீவ்காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், அவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால், இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை, அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை எக்ஸ்இ கொரோனா தொற்று உறுதி என தகவல் பரவி வரும் நிலையில் கேரளா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 282 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது கேரளாவில் 2,507 பேர் மட்டுமே தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM