சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பேசியதாவது:
கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதல்-அமைச்சராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோது தான், கலைஞரால், ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ என்ற விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. 10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில், 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குபிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்பதையும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கிராம அளவில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மட்டுமே அலுவலகங்கள் தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பிற துறைகள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களை ஒருங்கிணைத்து, அதனைக் கண்காணிக்க கிராம அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை போன்ற முக்கிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் “கிராமச் செயலகங்கள்” இந்த ஆண்டே கட்டப்படும் என்பதை இந்த அவையில் பெருமகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தப்படக்கூடிய பல்வேறு திட்டப்பணிகளைக் கண்காணித்திட முதன்முறையாக 2008-ம் ஆண்டு கலைஞர் முதல்அமைச்சராக இருந்தபோது, 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு வாகனங்களே வாங்கப்படாத நிலையில், கடந்த ஆட்சியில் 2019-2020 ஆம் ஆண்டில், புதிய வாகனங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால், செயல்முறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஏறத்தாழ 13 ஆண்டு காலமாக புதிய வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்படாத சூழல் உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.