ஆந்திர மாநிலம் திருப்பதியில், வருமான வரித்துறையினர் எனக்கூறி தொழிலதிபரின் பி.ஏவை காரில் கடத்தி 90 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நரசரோப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபரான சதீஷ், கடந்த 9ம் தேதி தனது சகோதரியிடம் ஒப்படைக்கக் கூறி அவரது பி.ஏவான ஸ்ரீனிவாஸ் என்பவரிடம், 90 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.
பணத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீனிவாஸ் பேருந்தில் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த மர்ம கும்பல், தாங்கள் வருமான வரித்துறையினர் என்றும் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கூறி ஸ்ரீனிவாஸை காரில் ஏற்றி பணத்தை பறித்துக் கொண்டு காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் வைத்து ஆந்திராவைச் சேர்ந்த அந்த 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 88 லட்சம் ரூபாய் பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.