புதுதில்லி: இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமான தருணமாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று 15-வது சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்திய சுதந்திரத்தின் பொன் விழா, கடந்த 70 ஆண்டுகளை புகழ்வதாக மட்டும் இல்லை. கடந்த 70 முதல் 75 ஆண்டு காலத்தை, நாம் வழக்கமானதாக கடந்திருக்கலாம். ஆனால் அடுத்த 25 ஆண்டு காலம் வழக்கமானதாக இருக்க முடியாது. அந்த 25 ஆண்டுகளில் நாட்டின் ஒற்றுமையை நிலை நாட்டுவது சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு. இதில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. நாம் எந்த முடிவு எடுத்தாலும், அது கிராமங்கள் அளவில் கூட நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருக்க கூடாது.
தொழில் முனைவோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இந்தாண்டின் முதல் காலாண்டில், 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
கடந்த 8 ஆண்டுகளில், மிகப் பெரிய மாற்றங்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவை நடத்தை மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அரசின் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புதுமையான திட்டங்களை திறம்பட அமல்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட 16 அதிகாரிகளுக்கு பிரதமரின் விருதுகளை, மோடி வழங்கினார்.