புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் வியூகம் அமைக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வருகை கட்சிக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று மூத்த தலைவர்களின் கருத்துக்களை அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார்.
வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில், பா.ஜ கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். வேறு எந்த கட்சியும் அகில இந்திய அளவில் பிரபலமாக இல்லை. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அதைத்தான் விரும்புகின்றனர். இது குறித்து வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும்.
பிரசாந்த் கிஷோர் ஒரு பிராண்ட். 2014-ம் ஆண்டு முதல் அவர் எந்த கட்சிக்கு பணியாற்றினாலும், அந்த கட்சியை வெற்றி பெற வைத்துள்ளார். கடந்த 2017-ல் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது மட்டும்தான் விதிவிலக்கு.
எந்தவித முன்நிபந்தனையும் இன்றி பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புவது நல்ல விஷயம். பா.ஜ.வுடன் போட்டி போடக் கூடிய தேசிய கட்சி காங்கிரஸ் என அவர் உணர்கிறார். காங்கிரஸ் அவரை சேர்த்தால், அது நிச்சயம் கட்சிக்கு உதவியாக இருக்கும்.
பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக இல்லாமல், கட்சியில் இணைய வேண்டும். ஆலோசகர் பணியை விட்டுவிட்டதாகவும், இனி எந்தக் கட்சிக்கும் ஆலோசகராக இருக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயக கட்சி என்பதால், புதிய நபர் வரும்போது, அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் விவாதிப்பர். யாரும் தனியாக முடிவெடுப்பதில்லை. காங்கிரஸ் தலைவரே முக்கியமானவர். அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவெடுப்பார்.
அரசியல் ஆதாயத்துக்காக, பிரிவினையை ஏற்படுத்த புல்டோசர் அரசியலை பாஜக நடத்தி வருகிறது. முஸ்லிம்களை 2-ம் தர குடிமக்களாக்க அக்கட்சி முயற்சிக்கிறது. இதன் மூலம் கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில், அவர்கள் சில மாநிலங்களில் பயனடைந்தனர். தற்போது பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திரும்ப, இதையே நடைமுறையாக்கிவிட்டனர். முதல் முறையாக, சிறுபான்மையினர் பற்றி அச்சத்தை பரப்பி, பெரும்பான்மையினர் பயமுறுத்தப்படுகின்றனர். ஆனால் பெரும்பான்மையினர் அரசியல் சாசன விதிகள், மதச்சார்பற்ற நாட்டைதான் எப்போதும் விரும்புகின்றனர்.
இவ்வாறு தாரிக் அன்வர் கூறினார்.