தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது, “தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுள்ளதால், தமிழக அரசு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கையிருப்பு வைத்திருக்கவில்லை. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’’ என கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தான் தற்போது மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வழங்கியிருக்கிறது.
மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்கி வருவதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். அதிமுக ஆட்சியில் 68 முறை மின்வெட்டு ஏற்பட்டிருந்தது. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாத போதிலும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. .இனி வருகின்ற 5 ஆண்டு காலத்திக்குள் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
மின்வெட்டு விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.