உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் ஒரு சம்பவமாக உருவெடுத்தது ஹிஜாப் விவகாரம். ஹிஜாப் விவகாரத்தில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல” என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 1,076 மையங்களில் 6.84 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மாநிலம் முழுவதும் இருக்கும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்வுகள் நடைபெறுகிறது. பல்வேறு மையங்களில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி, ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் முதலில் மனுதாக்கல் செய்த அலியா அசாதி, ரேஷாம் ஆகியோர் உடுப்பியில் உள்ள வித்யோதயா பி.யு கல்லூரிக்கு ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தேர்வு எழுத சென்றனர்.
அப்போது, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி முதல்வர், தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் கிட்டத்தட்ட 45 மணி நேரம் அவர்கள் பேசியுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் கர்நாடக அரசின் தீர்ப்பை மீறி தேர்வை எழுத அனுமதி அளிக்க முடியாது என கூறி அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த இரண்டு மாணவிகளும் தேர்வு எழுதாமல் சென்றதாக தெரிகிறது.
முன்னதாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வை எழுத அனுமதிக்குமாறு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.