மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கான மின்சாரம் தடைபட்டபோதும் தனியார் நிறுவனங்கள், மற்றும் மாநில தொகுப்பிலிருந்து மின் விநியோகிக்கப்பட்டு நிலைமையை சமாளித்ததாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், ஒரு சில இடங்களில் பல மணி நேரமும் மின்வெட்டு நீடித்தது.
கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மின் தடையால் இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இதுதொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு கொண்டுவந்தது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
தனியார் நிறுவனங்களிடம் 3,000 மெகாவாட் கூடுதலான மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சியை எடுத்ததுடன், நமது சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நகர பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையை சரி செய்துள்ளோம்.
மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்ட நிலையை கூட சமாளிக்கக்கூடிய அளவிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை முதல்வர் மின் வாரியத்துக்கு வழங்கினார்.
கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அனல் மின்நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. தற்போது நடைபெற்று வரும் நிதியாண்டில் இந்த உற்பத்தி 20,391 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
நிலக்கரி பற்றாக்குறை இருந்தபோதும், நாம் நிலக்கரியை இறக்குமதியை செய்யாமல், உற்பத்தியை அதிகரித்துள்ளது தமிழ்நாடு அரசு. மத்திய அரசும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கி வந்த நிலக்கரியை விட தற்போது குறைந்த அளவிலேயே நிலக்கரி வழங்கி வருகிறது.
பல மாநிலங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல், மே மாதத்திற்கான நிலக்கரி இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தமிழகத்தை திணறடித்த மின்வெட்டு: நள்ளிரவில் ட்வீட் செய்த செந்தில் பாலாஜி
புனல் மின் நிலையங்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிலக்கரியை காட்டிலும் குறைவாகவே வழங்கி வருகிறது.
நிலக்கரியை இறக்குமதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சிக் காலத்தில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலங்களை போல இல்லாமல் நமது மாநிலத்தில் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மின்மிகை மாநிலமாக நமது தமிழகம் இருக்கும் என்றார் செந்தில் பாலாஜி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“