புதுடெல்லி:
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகர்ஜுனா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்றவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 12-ந்தேதி டி.டி.வி.தினகரனை டெல்லியில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 11 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தினகரனிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து டி.டி.வி. தினகரன் மீண்டும் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தையடுத்து சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.