அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.
இதற்காக பிரச்சார வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மூன்று முறை விவாதித்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக உள்ள ஹர்திக் படேல், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் மேலிடத்தை குறை கூறி பேசியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குஜராத்தில் தம்மை பணி செய்ய விடாமல் தடுப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹர்திக் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் தேவைகளை எதிர்க்கட்சி எடுத்து கூற முடியாவிட்டால் அவர்கள் வேறு கட்சியை ஆதரிப்பார்கள் என்றும் ஹர்திக் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பாஜக வலுவுடன் அடித்தளத்துடன் இருப்பதாகவும் அவர்களால் உடனுக்கு உடன் முடிவுகளை எடுக்க முடிகிறது என்றும்
கூறியுள்ள ஹர்திக எதிரியின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் பகவான் ராமரை நம்புவர்கள் என்றும் இந்துவாக இருப்பதை பெருமையாக கருத்துவதாகவும் அவர் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அவர் பாஜகவில் இணைவாரா என்ற யூகங்களை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் ஹர்திக் கருத்தை வரவேற்றுள்ள குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கொள்கைகள் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
பொது வெளியில் ஹர்திக் பாட்டீல் தெரிவித்த கருத்துக்கள் பாராட்டுக்குரியது என்றும், அவர் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கியது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்