புவனேஷ்வர்: டோராண்டா கருவூல ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தனது ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து 950 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக இதுவரை 4 வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 5வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக லாலுவுக்கான ஒட்டுமொத்த சிறை தண்டனை 19 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.1.20 கோடியாகவும் அதிகரித்தது. இந்தநிலையில், ஏற்கனவே 4 வழக்கில் ஜாமீனில் உள்ள அவருக்கு 5வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, லாலு பிரசாத் யாதவ் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுகுறித்து லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் பிரபாத் குமார் கூறியதாவது, ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எங்களின் மனுவை ஏற்று ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டார் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தோம். லாலு ஏற்கனவே 41 மாதங்கள் சிறையில் இருந்தார். விசாரணை நீதிமன்றத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செவ்வாய்க்கிழமைக்குள் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜாமீன் பத்திரத்தை சமர்ப்பித்து விடுதலை உத்தரவை பெறுவோம் என்று கூறினார். கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் லாலு பிரசாத், ஜாமீனில் வெளிவந்து டெல்லியில் மகள் மிசா பாரதியுடன் தங்குவாரா? அல்லது பீகாருக்கு சென்று தீவிர அரசியலில் ஈடுபடுவாரா? எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.