ஆமதாபாத்: தொழில்முறை நிபுணர்கள் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியர்களுக்கு அதிக அளவில் பணி விசா வழங்க,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வந்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளுடன் தொழில் மற்றும் வர்த்தக ரீதியிலான நேரடி உறவுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதில் இந்தியாவுடனான உறவுக்கு பிரிட்டன்அரசு தீவிரம் காட்டிவருகிறது.இந்தியா, பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்ய, ஏற்கனவே பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கு நேற்று வந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை இன்று சந்தித்து பேச உள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம்
நேற்று குஜராத் வந்த போரிஸ் ஜான்சன் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் உட்பட பல துறைகளில் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான நிபுணர்கள், பணியாளர்களுக்கு தேவை உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியர்களுக்கு அதிக அளவில் பணி விசா வழங்கதயாராக உள்ளோம்.
இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் மிகவும் ஆர்வமுடன் உள்ளோம்.இதற்கு எந்தக் காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவசரப்பட மாட்டோம். இந்தாண்டுக்குள் இதில் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
உக்ரைன் விவகாரம்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன், எங்கள் நாட்டு அதிகாரிகள் ஏற்கனவே துாதரக அளவில் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே வரலாற்றுப் பூர்வமான நட்புறவு இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும், உக்ரைனின் புச்சா நகரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததை நினைவு படுத்த விரும்புகிறேன். பிரதமர் மோடியுடன் இன்று நேரடியாக பேசும்போது இந்த விவகாரம் குறித்து பேசுவேன். மேலும், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளன.
குஜராத் மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பிரிட்டனில் வசிக்கின்றனர். அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு பாலமாக திகழ்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
காந்தி புத்தகம் பரிசு
குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு நேற்று வந்த போரிஸ் ஜான்சன், அங்கு, மஹாத்மா காந்தி வசித்த,சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். பிரிட்டனைச் சேர்ந்த, மஹாத்மா காந்தியின் சிஷ்யையான மீராபென் எனப்படும் மெடலீனா ஸ்லேட் வசித்த குடிலையும் ஜான்சன்பார்வையிட்டார்.
மஹாத்மா காந்தி எழுதிய, இதுவரை அச்சிடப்படாத, ‘லண்டனில் வாழ்வது எப்படி’ என்ற புத்தகம் மற்றும் மீராபென் எழுதிய புத்தகங்கள்ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டன. மேலும், ராட்டையும்பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து, பஞ்ச்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரிட்டனைச் சேர்ந்த, ஜே.சி.பி.,நிறுவனத்தின் புதிய தொழிற் சாலையை, போரிஸ் ஜான்சன் நேற்று திறந்து வைத்து, ஆய்வு செய்தார்.
அதானியுடன் சந்திப்பு
ஆமதாபாதில் உள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர்கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.