தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காரியம் நடக்க வேண்டும் என்பதால் புகழ்ந்து பேசியதாக பாமக எம்.எல்.ஏ.,சதாசிவம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காமராஜர் போன்று நினைப்பதாக குறிப்பிட்ட மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம், தான் பேசுவதை புகழுரையாக நினைக்க வேண்டாம் என்றும் தனக்கு காரியம் நடக்க வேண்டும் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
மின்வெட்டை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும் அவையில் தொகுதி சார்ந்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தாங்கள் வெளிநடப்பு செய்யவில்லையா? என கேட்டநிலையில், தான் வெளிநடப்பு செய்துவிட்டு உடனே அவைக்குள் வந்துவிட்டதாக கூறியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், தண்ணீர் குடித்துவிட்டு பேச்சை தொடருமாறு சபாநாயகர் அப்பாவு கூறினார். அப்போது, தான் தண்ணீர் குடித்தால் நீண்ட நேரம் பேசுவேன் என்றும் அதனால் தனது உரையை விரைந்து முடிப்பதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் தர வேண்டும் என எம்.எல்.ஏ அப்துல் சமது பேரவையில் கோரிக்கை விடுத்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிரித்தனர்.
பேரவையில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, தான் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என நீண்ட நேரமாக கை உயர்த்திக்கொண்டிருந்தார். அதனை கவனித்த சபாநாயகர் அவர் பேச வாய்ப்பு வழங்கினார்.