மதுரை: “வழக்கு தொடுப்பவர்களின் பாவங்களை வழக்கறிஞர் சுமக்கமாட்டார்” எனக் கூறி ஜாமீன் உத்தரவாத முறைகேடு வழக்கிலிருந்து வழக்கறிஞரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகோபால். இவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜாமீன் பெற்ற நபருக்கு உத்தரவாதம் வழங்கியவர்கள் செய்த முறைகேட்டிற்காக வீரபாண்டி போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் வழக்கறிஞராக பணி செய்தேன். மற்றபடி அந்த முறைகேட்டிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: “ஜாமீன் உத்தரவாதம் வழங்கியவர்களின் கையெழுத்து மற்றும் ஆவணங்கள் போலியானவை என்றால், உத்தரவாதம் வழங்கியவர்கள் மீது தான் வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் வழங்கிய மணி, முத்துக்கருப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடான ஆவணங்களை வழக்கறிஞர் தயாரிக்கவில்லை. ஜாமீன் உத்தரவாத கையெழுத்திட்டவர்கள் தான் அந்த ஆவணங்களை நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளனர். வழக்கறிஞர் எந்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை. எனவே அதற்காக வழக்கறிஞர் மீது குற்றம் சுமத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாது.
பைபிளில் ‘பாவம் செய்யும் ஆத்மாவே சாயும். தகப்பனின் அக்கிரமத்தை மகன் சுமக்கமாட்டான், மகனின் அக்கிரமத்தை தகப்பன் சுமக்கமாட்டான்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கு தொடர்பவர்களின் பாவங்களை வழக்கறிஞர் சுமக்கமாட்டார். எனவே மனுதாரர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.