புதுச்சேரி | ராஜ்நிவாஸில் அமித் ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ராஜ்நிவாஸில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரி வளர்ச்சிக்கான முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ரங்கசாமி முன்வைக்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக வரும் 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். ஏற்கெனவே தேர்தலில் வென்று பதவியேற்ற பிறகும் பிரதமர் மோடியை இன்னும் முதல்வர் ரங்கசாமி சந்திக்காமல் இருந்தார். அண்மையில்தான் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரினார். ஆனால், பிரதமர் பணிச் சூழல் தொடர்ச்சியாக இருந்ததால் நேரம் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், அமித் ஷா புதுச்சேரிக்கு 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வருகிறார். அமித் ஷாவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து சாலை வழியாக புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். காலை 9.45 முதல் 11.45 வரை அந்நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சாலை வழியாக பாரதியார் இல்லத்துக்கு வருகிறார். அங்கு பாரதி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். அரவிந்தர், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்தி வழிபடுகிறார்.

பகல் 12.25-க்கு ராஜ்நிவாஸ் சென்று மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கிறார். அத்துடன் முக்கியமானவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு கம்பன் கலை அரங்கு வருகிறார். அங்கு புதுச்சேரி அரசு விழாவில் பங்கேற்கிறார். சுமார் 1.30 மணி நேரம் நடைபெறும் அவ்விழாவைத் தொடர்ந்து மதியம் 1.35 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். மாலை 3.45 மணிக்கு பாஜக அலுவலகம் செல்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். சுமார் 1.15 மணிநேரம் அங்கு நிகழ்வு நடக்கிறது. அதைத் தொடர்ந்து 5.05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஏர்போர்ட் சென்றடைகிறார். அங்கிருந்து சென்னை சென்று, டெல்லி புறப்படுகிறார்.

இச்சூழலில், மதியம் ராஜ்நிவாஸில் முதல்வர் ரங்கசாமி அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரிக்கான கோரிக்கை மனு தரவுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.